Sunday, July 29, 2007

இஸ்லாம் மார்க்கம் ஒரு பார்வை-1

அல்லாஹ் என்றால் என்ன..? அது யார்..??

நம்மில் பலரிடையே அல்லாஹ் என்றால் முஸ்லீம் கடவுள் என்ற எண்ணம் இருக்கிறது. அவர்கள் அப்படி சொல்லும் போது நான் அதை நகைச்சுவையாக எண்ணி சிரிப்பேன். எப்படி ஆங்கிலத்தில் கடவுளை காட் (God) என்றும், தமிழில் இறைவன், கடவுள் என்கிறோமோ அதே போல் அரபு மொழியில் அல்லாஹ் என்றால் இறைவன், கடவுள் என்று பொருள். சில நண்பர்கள் என்னிடம் "நமக்குள் ஒரே வித்தியாசம் தான். நீங்கள் அல்லாஹ்வை வணங்குகிறீர்கள், நாங்கள் கடவுளை வணங்குகிறோம்" என்பார்கள். ஆக, அவர்கள் சொல்வது போல் அல்லாஹ், கடவுள் என்ற பெயர் தானே வேறே தவிர மற்றபடி அர்த்தமும், ஆண்டவனும் ஒன்று தான். ஒரு ஊருக்கு பல வழிகள் இருக்கலாம். ஆனால், நாம் சென்று அடையும் போது அது ஒரே ஊர் தான்.

இறைவன் எப்படிப்பட்டவன்?

இந்த இறைவன் தான் இந்த உலகத்தை படைத்து, அதில் அனைத்து ஜீவராசிகளையும் படைத்து அருள்பாலிப்பவன். அவன் ஒருவன். தனித்தவன். அவனுக்கு ஈடு இணை கிடையாது. அவன் ஆணுமில்லை, பெண்ணுமில்லை (நம் கலாச்சாரத்தில் சமுதாயத்தில் புத்திகூர்மை, உழைப்பு, வலிமை என்று சிறப்பு குணங்கள் ஆணுக்கே என்று நினைப்பதால் பேச்சிலும், எழுத்திலும் இறைவனை ஆண்பாலில் குறிக்கிறோம்). அவனுக்கு வாரிசுகள் கிடையாது. அவனுக்கு பசி, தூக்கம், பலவீனங்கள், பிறப்பு, இறப்பு, தேவைகள் எதுவும் கிடையாது. அவன் ஒரு அளவிடமுடியாத மகா சக்தி. அவன் சக்திக்கு ஒரு உதாரணம் வேண்டுமென்றால் சொல்லி வைத்தது போல் அததன் வேலையை சரியாக செய்யும் பூமி, சூரியன், சந்திரன், கிரகங்கள், நட்சத்திரம் போன்ற எல்லாமே சொல்லலாம்.

மசூதி என்றால் என்ன..?

அரபு மொழியில் மஸ்ஜித் என்றால் இறைவனை வழிபடும் தலம் என்று பொருள். அதுவே தமிழில் பள்ளிவாசல், பள்ளிவாயில், மசூதி என்று அழைக்கப்படுகிறது. ஓரிறையை மட்டும் மனதில் நம்பிக்கை வைத்தவர்கள் சென்று இறைவனை வழிபடும் இடம் இது. முஸ்லீம்களின் ஐந்து கடமைகளில் ஒன்றான ஐவேளை தொழுகையை நிறைவேற்ற இங்கு தான் செல்வார்கள். இந்த மசூதிக்குள் யார் வேண்டுமானாலும் நுழையலாம், ஒரே ஒரு நிபந்தனை மட்டும் உண்டு. அவன் ஓரிறையை மட்டும் வணங்க வேண்டும். மற்றபடி சாதி, மொழி, இனம் போன்ற ஏற்றத்தாழ்வுகளுக்கு இங்கு வேலை இல்லை. மனித சமூகத்தின் சமத்துவத்தை நீங்கள் நேரில் காணவேண்டுமானால் முஸ்லீம்களின் தொழுகையின் போது காண வேண்டும். வாழ்வின் ஏற்றத்தாழ்வுகளை கொண்ட எல்லா மனிதர்களும் எந்த ஒரு பாகுபாடின்றி தோளோடு தோள் சேர்ந்து நிற்கும் போது அங்கு நெஞ்சை நிமிர்த்தி நிற்பது முஸ்லீம்கள் மட்டுல்ல, மானிட சமுதாயத்தின் ஏற்றத்தாழ்வுகளுக்கு சாவு மணி அடிக்கும் மானுடமும் தான்!!

நன்றி -இதயம்(ஜாபர்)

No comments: