786???
இஸ்லாத்தில் 786 என்ற எண் நிறைய சம்பந்தப்பட்டிருக்கிறது. 786 என்றால் என்ன, அதை பயன்படுத்துவதன் காரணம் என்ன..? இஸ்லாம் என்ற பெயரில் இஸ்லாத்தில் சொல்லப்படாத விஷயங்களைக் கொண்டு நடத்தப்படும் கேலிக்கூத்துக்களில் இதுவும் ஒன்று. பொதுவாக ஒருவனை முஸ்லீம் என்று குறிக்கக் கூட இந்த எண்ணை பயன்படுத்துகிறார்கள். இன்றும் முஸ்லீம்கள் தங்கள் வீடுகளில், வாகனங்களில், கடிதம் போன்றவை எழுதும் போது கூட இந்த 786 என்ற எண்ணை அது என்ன என்று அறியாமலேயே பயன்படுத்துகிறார்கள். முஸ்லீம்கள் தான் இப்படி என்றால் மாற்று மதங்களிலும் கூட இதன் அர்த்தம் தெரியாமல் நிறைய விஷயங்களில் பயன்படுத்துகிறார்கள். திரைப்படங்களில் கூட கதாநாயகன் முஸ்லீம்களின் தோழன் என்பது போல் காட்ட அவர் போட்டிருக்கும் டாலரில், வைத்திருக்கும் உழைப்பாளர் தகடில், அணிந்திருக்கும் கைதி உடையில் 786 வேண்டும் என்று கேட்டு வாங்கிக்கொள்கிறார்கள். நான் ஏற்கனவே சொன்னது போல் இந்தியாவில் முஸ்லீம்கள் இஸ்லாத்தை தழுவிய பிறகு தன் தாய் மதத்தில் இருந்த சில சடங்குகளை அவர்கள் அறியாமலேயே வேறு வடிவங்களில் செய்து நடைமுறைப்படுத்தி வந்தனர். உதா.தாலி - கருகமணிசிலை வழிபாடு - தர்ஹா வழிபாடு போன்றவை சொல்லலாம்.அதைப்போல ஒரு தாக்கம் தான் இதுவும். உதாரணத்திற்கு இந்து நண்பர்கள் தாளில் எதுவும் எழுதத்தொடங்கும் போது உ என்று பிள்ளையார் சுழியோ, ஓம் என்றோ, முருகன் துணை, சிவமயம் என்று தங்கள் இஷ்டதெய்வங்களுக்கு தகுந்தவாறு இடுவார்கள். இதை தொடர்ந்த கிறிஸ்துவ நண்பர்களும் + என்ற சிலுவை குறியையோ, ஏசு துணை போன்றோ செய்வார்கள். இதையெல்லாம் பார்த்து காப்பியடித்து செய்த விஷயம் தான் முஸ்லீம்களின் 786 என்ற எண். அது சரி, இத்தனை எண் இருக்கும் போது அதென்ன குறிப்பாக 786 என்று கேட்கிறீர்களா..? விஷயம் இருக்கிறது.முஸ்லீம்கள் எந்த செயலை தொடங்கினாலும் இறைவனின் நினைவுடன், அவன் மேல் வைத்த நம்பிக்கையுடன் தொடங்க வேண்டும் என்பது நபிகளார் சொல்லிக்கொடுத்த வழி முறை. எனவே செயலை தொடங்கும் முன் பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹிம் என்று தொடங்குவது வழக்கம். இதன் பொருள் எல்லாம் வல்ல இறைவனின் திருப்பெயரால் ஆரம்பம் செய்கிறேன் என்பதாகும். இதையே சோம்பல் பட்டு சுருக்கமாக பிஸ்மில்லாஹ் என்று சொல்வது பிறகு வழக்கமானது. நம்முடைய முஸ்லீம் சோம்பேறி மனிதர்கள் அதையும் முழுதாக சொல்லாமல் இன்னும் சுருக்க ஏதாவது வழி இருக்கிறதா என்று பார்த்தார்கள். அரபி மொழியில் உள்ள அடிப்படை எழுத்துக்கள் ஒவ்வொன்றிற்கும் ஒரு எண் மதிப்பு உள்ளது. உதாரணத்திற்கு முதல் எழுத்தான 1 என்ற வடிவில் உள்ள அலீஃப் என்ற எழுத்திற்கு எண் மதிப்பு ஒன்று. இப்படி பிஸ்மில்லஹிர்ரஹ்மானிர்ரஹிம் என்ற வாக்கியத்தில் வரும் எல்லா எழுத்துக்களின் எண் மதிப்பையும் கூட்டிய போது கிடைத்தது தான் இந்த 786. ஆச்சரியமாகவும், அதிர்ச்சியாகவும் இருக்கிறதா..? அதான் உண்மை. ஒரு வார்த்தையை ஒழுங்காக சொல்ல தயங்கிய சோம்பேறிகள் உண்டு பண்ணிய எண் தான் 786. சரி.. இப்படி செய்வது சரியா..?நிச்சயமாக சரியில்லை. நம்மை படைத்து, அருள்பாலித்து வணங்கும் இறைவனை ஒரு முழு வாக்கியம் கொண்டு நினைவில் கொள்ள முடியாதவன் எப்படி ஐவேளை தொழுகை செய்து நினைக்க முடியும்.? நிச்சயம் முடியாது. சரி.. கடவுள் நம்பிக்கையை விடுங்கள். தர்க்க ரீதியாக பேசுவோம். பொதுவாக நம் பக்கம் ரங்கநாதனை ரங்கா என்றும், கோபிகிருஷ்ணனை கோபி என்றும் சுருக்கி செல்லமாக கூப்பிடுவோம். இவரை செல்லமாக இன்னும் சுருக்கி கூப்பிட வேண்டும் என்றால் 786 விஷயம் மாதிரியே அவர் பெயரின் எழுத்துக்களுக்கு எண் மதிப்பு கொடுத்து கூட்டி இறுதியில் வரும் எண்ணை கொண்டு அழைக்க முடியுமா.? உதாரணத்திற்கு என்ன 814 ஊருக்கு போறியா..? எங்கே உன் மகன் 512-ஐ கொஞ்ச நாளா காணோம்..? இதை 325 கிட்ட கொடுத்துடு என்று ஆகிவிடும். இது எந்த வகையில் சரியாக இருக்கும். அது மட்டுமல்லாமல் ஒரே எண் பல பேரின் கூட்டுத்தொகையில் வர வாய்ப்புள்ளதால் குழப்பம் தான் மிஞ்சும். இந்த 786 எண்ணின் உபயோகம் இன்றைய காலகட்டத்தில் குறைந்து விட்டது என்றாலும் இன்றளவும் பயன்படுத்தப்பட்டு வருவது மிகப்பெரிய அறிவீனம், அதுவும் இஸ்லாத்திற்கு எதிரான பலவீனம் என்பது தான் உண்மை. இதை படித்த பிறகாவது அப்படி செய்வதை மாற்றிக்கொள்ளவேண்டும் என்பது தான் என் விருப்பம்.
நன்றி -இதயம்(ஜாபர்)
Sunday, July 29, 2007
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment