Sunday, July 29, 2007

இஸ்லாம் மார்க்கம் ஒரு பார்வை-5

இஸ்லாம் சிலை வணக்கத்திற்கு எதிரானது

நீங்கள் அனைவரும் அறிந்தது போல் இஸ்லாம் சிலை வணக்கத்திற்கு எதிரானது. இறைவனின் பெயரைச் சொல்லிக்கொண்டு உயிருள்ள, உயிரற்ற எதையும் கடவுளாக வணங்குவதை இஸ்லாம் கண்டிக்கிறது. இஸ்லாத்தை பொருத்தவரை அதன் கொள்கை "உன்னை படைத்தவனை வணங்கு.. உன்னால், என்னால் படைக்கப்பட்டவைகளை வணங்காதே..!!" என்பது தான். படைக்கப்பட்டவைகள் என்று சொல்லும் போது அது இறைவன் படைத்த மனிதனாகவும் இருக்கலாம், மனிதனால் உண்டாக்கப்பட்ட பொருட்களாகவும் இருக்கலாம். இந்த சூழ்நிலையில் இஸ்லாத்தின் மேல் மாற்றுமதத்தவரால் கூறப்படும் ஒரு குற்றச்சாட்டு என்ன தெரியுமா..? இஸ்லாம் சிலை, உருவங்களை கொண்டு வணங்குவதை தடை செய்திருக்கும் போது முஸ்லீம்கள் மக்காவில் உள்ள கஃபா எனப்படும் ஒரு கட்டிடத்தை நோக்கியே தொழுகை நடத்துவதும், அங்கு சென்று அதன் முன் விழுந்து வணங்குவதும் ஏன்..?ஏன் என்ற காரணத்தை சொல்வதற்கு முன் கஃபா என்பது என்ன என்பதை சொல்லிவிடவேண்டியது அவசியம். அது மட்டுமல்லாமல் அது மற்ற மதத்தவர்க்கு தெரியாமல் பாதுகாக்கப்பட வேண்டிய இரகசியங்கள் ஒன்றும் அங்கு இல்லை. அதைப்போன்ற ஒரு எண்ணம் அவர்களுக்கு ஏற்பட்டதால் தான் மேலே உள்ளது போன்ற கேள்விகள் வருகின்றன. கஃபா என்பது சதுர வடிவத்தில், சாதாரண ஒரு அறையைப்போன்ற உள் அமைப்பு கொண்ட ஒரு கட்டடம். இது சவுதி அரேபியாவில் உள்ள முஸ்லீம்களின் புனித தலங்களில் ஒன்றான மக்கா நகரத்தில் உள்ளது. இந்த சாதாரண கட்டிடத்திற்கு ஏன் இஸ்லாத்தில் இத்தனை முக்கியத்துவம் ஏன் என்று நீங்கள் நினைப்பது எனக்கு புரிகிறது. கஃபா இறையில்லம் இறைத்தூதர்களான இப்ராஹிம் நபி மற்றும் இஸ்மாயில் நபி ஆகியோர்களால் கட்டப்பட்டு மேம்படுத்தப்பட்டதாக குரான் தெரிவிக்கிறது. இந்த கட்டிடம் தான் இஸ்லாமிய வரலாற்றில் இறைவனை வணங்க இறைத்தூதர்களால் எழுப்பப்பட்ட முதல் பள்ளி (மசூதி) என்பதால் தான் இதற்கு இத்தனை சிறப்பும். இது முஸ்லீம்களால் இறைவனின் இல்லம் எனப்படுகிறது. பொதுவாக தொழுகைக்கு பயன்படும் பள்ளிகள் அனைத்தும் இறையில்லம் என்று தான் இஸ்லாத்தில் சொல்லப்படுகிறது. காரணம், அங்கு கடவுளை வணங்குதலை தவிர மற்ற காரணங்களுக்கு பயன்படுத்துதல் கிடையாது என்பதால். இருந்தாலும் மேற்சொன்ன பல சிறப்புகளால் கஃபா மற்ற பள்ளிகளை காட்டிலும் அதிக பெருமைக்குரியது உண்மை. இந்த பள்ளி இருக்கும் திசையில் உலக முஸ்லீம்கள் அனைவரும் தொழுது இறைவனை வணங்குகிறார்கள். இங்கு ஒரு விஷயத்தை நாம் கவனிக்க வேண்டும். முஸ்லீம்கள் தங்கள் தொழுகையின் போது கஃபாவை முன்னோக்கி நின்று தொழுகிறார்களே தவிர கஃபாவை வணங்குவதில்லை. காரணம், முஸ்லீம்கள் இறைவனைத்தவிர வேறு எதையும் வணங்கக்கூடாது என்பது அடிப்படை தத்துவம். திசை பார்த்து கஃபாவை தொழுவது பற்றி குரான் வசனம் 2:144 சொல்கிறது. அதெல்லாம் சரி தான். அதென்ன ஒரே திசையை நோக்கி நின்று தான் தொழ வேண்டும் என்ற கட்டாயம் ஏன்..?

அடிப்படையில் இஸ்லாம் சமத்துவத்தை, ஒற்றுமையை, சகோதரத்துவத்தை வலியுறுத்துகிறது. இஸ்லாத்தில் இவற்றை கண்கூடாக காணவேண்டுமென்றால் முஸ்லீம்களின் வணக்கத்தலமான மசூதிக்கு சென்று பார்த்தால் தெரியும். அவர்கள் அங்கு போகும் போதும் சரி, வணங்கும் போதும் சரி, வணங்கி முடிந்து வரும் போதும் சரி மேற்சொன்ன விஷயங்கள் நிறைந்திருக்கும். எத்தனை பெரிய சிறிய, ஏழை பணக்காரன் மசூதிக்குள் போனாலும் அவர்கள் அனைவரும் தோளோடு தோள் சேர்த்து நின்று தான் வணங்க வேண்டும். யார் முதலில் வருகிறார்களோ அவர்களுக்கு முன்வரிசை கிடைக்கும். கடைசியில் வருகிறவன் அரசனாக இருந்தாலும் அவன் கடைசி வரிசையில் தான் நிற்க வேண்டும். அதே போல் தொழுகை யாருக்காகவும் காத்திருந்து தொடங்குதல் இருக்காது. சரியான நேரத்தில் தொழுகை துவங்கும். இப்படி சமத்துவம், சகோதரத்துவம் கற்றுக்கொடுக்கும் இஸ்லாம் அது குலையாமல் இருக்க சொல்லிக்கொடுத்த மற்றொரு வழி தான் கஃபாவை நோக்கி தொழுதல் என்பது. இந்த நிபந்தனை இங்கு இல்லை என்றால் அவரவர் இஷ்டத்திற்கு தன் திசையை மாற்றி தொழ தொடங்குவார்கள். இது பல பிரச்சினைகளுக்கு வழி வகுக்கும். சிலர் தொழ சிறந்ததாக ஒரு குறிப்பிட்ட திசையை சொல்வார்கள். மற்றவர்கள் அதை மறுப்பார்கள். அதனால் கருத்துவேறுபாடு வரும். அது கலகமாக மாறும். அதுமட்டுமில்லாமல் மூடநம்பிக்கையை வளர்க்கவும் இது உதவும். சிலர் சொல்வார்கள் எனக்கு தெற்கு தான் ராசியானது என்பதால் அந்த திசையில் தொழுகை வேண்டும் என்று சொன்னால், பலரும் பலவாறு மூடநம்பிக்கையை ஆரம்பிக்க வாய்ப்பிருக்கிறது. இதற்கெல்லாம் சேர்த்து இஸ்லாம் அடித்த சம்மட்டி அடி தான் கஃபாவை நோக்கி தான் தொழ வேண்டும் என்பது. இதனால் யாதொரு கருத்துவேறுபாடுமின்றி முஸ்லீம்களால் தொழ முடிகிறது. முஸ்லீம்கள் தான் உலகின் முதல் வரைபடத்தை உருவாக்கினார்கள். அவர்கள் முதலில் வரைபடத்தில் தெற்கு திசையை கீழ்நோக்கியும், வடக்கு திசையை மேல்நோக்கியும் இருக்குமாறு வரைந்தார்கள். அப்போது கஃபா அந்த வரைபடத்தில் உலகின் நடுநாயகமாக இருந்தது. அதன் பிறகு வந்த மேற்கத்திய அறிஞர்கள் உலக வரைபடத்தை வரைந்த போது முன்பு இருந்ததற்கு நேர் எதிராக அதாவது தென் திசை மேலேயும், வடதிசை கீழேயும் வரைந்தார்கள். அப்போதும் கஃபா உலகின் மையத்திலேயே இருந்தது..!! முஸ்லீம்கள் மஸ்ஜித் ஹரம் எனப்படும் மக்காவின் அந்த பள்ளிக்கு சென்றால் கஃபாவை சுற்றி வலம் வருவார்கள். அதுவும் அந்த கட்டிடத்தை வழிபட அல்ல. மனித குலம் ஒரே இறைவனை வணங்க வேண்டும் என்பதை மறைமுகமாக உணர்த்துவிதமாக தான் அதை செய்கிறார்கள். ஒருவர் ஒரு முறை வலம் வந்தால் அங்கு ஒரு நடுப்பகுதி இருப்பது போல் இறைவனும் ஒருவனே என்பது தான் அதன் அர்த்தம். கஃபா என்ற அந்த பள்ளி வணங்கப்படுகிறது என்றால் அதன் மேல் நம் கால் படுவதை அனுமதிக்க மாட்டோம் (சிலைகளின் மீது கால் படுவதை நாம் அனுமதிப்போமா..?). ஆனால், அந்த நவீன வசதிகள் இல்லாத நபிகளின் காலத்தில் அனைவரையும் தொழுகைக்கு அழைக்க சொல்லப்படும் "பாங்கு" எனப்படும் தொழுகை அழைப்பு கஃபாவின் மேல் நின்று தான் அழைக்கப்பட்டது. இப்போதும் கூட அதன் மேல் உள்ள துணியை மாற்றும் போதும் மனிதர்களின் கால்கள் அதன் மேல் பட்டுக்கொண்டு தான் இருக்கிறது. இப்போது சொல்லுங்களேன், கஃபா முஸ்லீம்களால் வணங்கப்படுகிறதா..?

நன்றி -இதயம்(ஜாபர்)

No comments: