Sunday, July 29, 2007

இஸ்லாம் மார்க்கம் ஒரு பார்வை-6

குடும்பக்கட்டுப்பாடு பற்றி

இஸ்லாம் குடும்ப கட்டுப்பாடு பற்றி என்ன தான் சொல்கிறது...? அது குழந்தை பிறப்பை கட்டுப்படுத்துவதையே தடுத்திருக்கிறதா..? பகுத்தறிவு மூலம் ஒவ்வொரு செயலின் ஆரம்பம், இறுதி விளைவுகளை அடிப்படையாக கொண்டு தன் கொள்கையை விஸ்தரிக்கும் இஸ்லாம் அப்படி சொல்லவில்லை. இஸ்லாமின் பார்வையில் மக்கள் சக்தி என்பது மகத்தான சக்தி..! இறைவனின் அன்பு பரிசு. கடவுள் ஒவ்வொரு உயிரையும் இந்த உலகில் படைக்கும் போது அவரவர்களுக்கான உணவை தீர்மானித்து விட்டு தான் படைக்கிறான். எனவே அவர்களைப்பற்றிய கவலையால் அந்த உயிரையே வேண்டாம் என்று தடுப்பதை இறைவன் மிகவும் வெறுக்கிறான். அப்படி செய்பவர்கள் இறைவனுக்கு எதிரானவர்கள். அதே நேரம் முற்றும் முழுதுமாக குடும்பக்கட்டுப்பாட்டை இஸ்லாம் தடை செய்யவில்லை. அப்படி செய்வது ஏற்கக்கூடிய காரணம் அல்ல என்பதும் பல பிரச்சினைகளுக்கு தீர்வு சொல்லும் இஸ்லாத்திற்கு தெரியும். உதாரணத்திற்கு மறு குழந்தை பிறப்பு என்பது தாயின் உயிரை குடித்துவிடும் வாய்ப்பு இருக்கும் பட்சத்தில் (சிசேரியன் போன்ற காரணங்களால்) அங்கே குடும்ப கட்டுப்பாட்டை இஸ்லாம் ஆதரிக்கிறது. அதுவும், கரு உருவாவதற்கு முன்பே குழந்தை உருவாவதை திட்டமிட்டு தடுத்துவிடவேண்டும். குழந்தை உண்டான பிறகு அதை அழிப்பதை இஸ்லாம் வன்மையாக கண்டிக்கிறது. இதன் மூலம் இஸ்லாம் விபச்சாரத்தின் மூலம் குழந்தை உருவாகி, அதை அழிக்கும் இக்கால செயலை பெருங்குற்றமாக கருதி எச்சரிக்கிறது. அதே போல் குழந்தை பிறப்பை தடுக்கும் கருத்தடை சாதனங்களை அவசியமில்லாமல் தவறான நோக்கில் பயன்படுத்துவதை இஸ்லாம் கண்டிப்பதன் மூலம் அங்கும் விபச்சாரத்திற்கு எதிரான தன் சாட்டையை சொடுக்குகிறது என்பதை புரிந்து கொள்ளலாம். இறைவன் மனிதர்களுக்கு அனுமதி அளித்த நன்மையான குடும்பக்கட்டுப்பாடு முறை ஒன்று உண்டு. இது நம்மில் பலபேருக்கு தெரியாது. விஞ்ஞானம் அவற்றை எல்லாம் மறைத்தாலும் அவை கொடுக்கும் பிரச்சினைகளுக்கு பிறகு இறைவனின் கட்டளைகளுக்கு முன் விஞ்ஞானம் கீழ் தான் என்று நிரூபணம் ஆகிறது. ஒரு பெண் குழந்தை பெற்று ஒரு குறிப்பிட்ட கால இடைவெளிக்கு பிறகு தன் கணவனிடம் உடலுறவு கொள்ளும் பட்சத்தில் அடுத்த ஒரு வருடத்திற்கு முன்பே அவள் இன்னொரு குழந்தைக்கு தாயாகும் வாய்ப்பு இருக்கிறது. இது அந்த குழந்தைக்கும், தாய்க்கும் உகந்ததல்ல. இதற்கு இஸ்லாம் சொல்லும் தீர்வு என்ன தெரியுமா..? அவள் குழந்தை பெற்ற பிறகு தொடர்ந்து இரண்டு வருடத்திற்கு சிசுவிற்கு பாலூட்ட வேண்டும். அப்படி பாலூட்டும் இந்த 2 வருட காலகட்டத்தில் உடலுறவின் மூலம் குழந்தை உருவாக வாய்ப்பே இல்லை. காரணம், பெண்ணின் தாய்ப்பால் சுரப்பு குழந்தையின் கரு உருவாக்கத்தை தடுத்துவிடும். இது இறைவனின் படைப்பில் உள்ள அற்புதம். இதன் மூலம் நன்மையான குடும்பக்கட்டுப்பாட்டிற்கும், சிசுவின் ஆரோக்கியத்திற்கு மிக அவசியமான தாய்ப்பாலுக்கும் வழி ஏற்பட்டுவிடுகிறது. இந்த வழிமுறை 1400 வருடங்களுக்கு முன் இறைவன் அருளிய குரானில் சொல்லப்பட்ட விஷயங்கள். ஆனால், இவை அனைத்தையும் விஞ்ஞானம் இப்போது தான் கண்டுபிடித்து ஒவ்வொன்றாக சொல்லிக்கொண்டிருக்கிறது.!!

நன்றி -இதயம்(ஜாபர்)

No comments: